Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 05 ஜூலை (ஹி.ச)
தமிழ்நாடு முதலமைச்சர் பதவியில் இருந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விலகிய பிறகு கடந்த 55 நாட்களில், தமிழக மக்கள் பல்வேறு உரிமைகளையும் பெருமைகளையும் இழந்துள்ளதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
ஆளுநரின் ஆய்வு நடவடிக்கைகள், கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதியில் அணு கனிம சுரங்க அனுமதி நீட்டிப்பு, இஸ்லாமியர்களுக்கான 3.5% இடஒதுக்கீடு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு, பக்ரீத் பண்டிகையின்போது பொதுஇட தொழுகை மற்றும் பலியிடுதலுக்கான நீதிமன்றத் தடை, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் உரிமை தொடர்பான FCRA சட்டம், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் கட்டுவதற்கான அனுமதி நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள தடைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரங்களில் தமிழக அரசுக்கு ஆதரவு அளிக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் தங்களது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்றும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் நடப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியா அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவர், தமிழக மக்களின் நலன் குறித்து தோழமைக் கட்சிகள் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ