ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விவகாரம்- எதிர்க்கட்சித் தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யக் கோரி அயோத்தி டிஎஸ்பிக்கு விஹெச்பி தலைவர் கடிதம்
உத்தரபிரதேசம், 05 ஜூலை (ஹி.ச.) அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர்களிடம் அதிகாரப்பூர்வமாக வாக்குமூலம் பதிவு செய்து, அவர்கள் கூறிய குற்ற
அயோத்தி


உத்தரபிரதேசம், 05 ஜூலை (ஹி.ச.)

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர்களிடம் அதிகாரப்பூர்வமாக வாக்குமூலம் பதிவு செய்து, அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை பெற வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் (VHP) சர்வதேசத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார், அயோத்தி காவல் துணைக் கண்காணிப்பாளர் (DSP) அசுதோஷ் திவாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், முன்னாள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்டோர், ராமர் கோவில் நன்கொடை முறைகேடு தொடர்பாக பொதுவெளியில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அவர்கள் அனைவரிடமும் அதிகாரப்பூர்வமாக வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் உண்மை அடிப்படை என்ன, தகவல்களின் மூலாதாரம் எது, அதனை நிரூபிக்கும் ஆவணங்கள் அல்லது ஆதாரங்கள் உள்ளனவா என்பதை விசாரணை அதிகாரிகள் கேட்டு பெற வேண்டும் என்றும் அலோக் குமார் வலியுறுத்தியுள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலுக்காக பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள் முறைகேடாக கையாளப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், உத்தரப் பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழு (SIT) மூலம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குற்றச்சாட்டுகளை முன்வைத்த அரசியல் தலைவர்களின் வாக்குமூலமும் விசாரணைக்கு முக்கியமானதாக இருக்கும் என்று விஹெச்பி தரப்பு கருதுகிறது.

இதற்கிடையில், இந்த விவகாரத்தில் யாருக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே விஹெச்பியின் நிலைப்பாடு என்றும் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில் நடைபெறும் விசாரணை முழுமையானதாக இல்லை என்றும், உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P