Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 06 ஜூலை (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று இரவு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற நபரை பிடித்து சோதனையிட்டபோது, அவரிடம் இருந்த மூட்டைகளில் சுமார் 18 கிலோ எடை கொண்ட குட்கா பாக்கெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குலாமணி என்பது தெரியவந்தது.
அவர் ஆந்திரா வழியாக இந்த பொருட்களை கடத்தி வந்து, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிறு கடைகளுக்கு விநியோகிக்க முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கடத்தலுக்கு பின்னால் பெரிய நெட்வொர்க் செயல்படுகிறதா, யார் மூலம் இந்த பொருட்கள் வருகிறது என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு முதல் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட மெல்லும் புகையிலை பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனைக்கு தடை விதித்துள்ளது.
ஆயினும், அண்டை மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது.
பொதுமக்களின் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் இத்தகைய பொருட்களின் விற்பனையை முற்றிலும் ஒழிக்க காவல்துறையினர் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, குலாமணி மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b