Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜூலை (ஹி.ச)
தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டங்களை விரைவுபடுத்த சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து ரூ.1 லட்சம் கோடி கடன் பெற்று முதலீடு செய்ய வேண்டும் என்றும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகிர் உள்ளிட்டோருடன், பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சௌமியா அன்புமணி, வைத்தி கணேஷ்குமார், சிவக்குமார் ஆகியோருடன் இணைந்து நீர் மேலாண்மை தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
தமிழகத்தின் நீர்வளத்துறை அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாநிலத்தின் நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றதாக தெரிவித்தார்.
38 மாவட்டங்களிலும் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பல்வேறு பரிந்துரைகள் அரசிடம் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
காவிரி–குண்டாறு இணைப்பு, தர்மபுரி ஒகேனக்கல் உபரி நீர் திட்டம், அரியலூர் சோழர் பாசனத் திட்டம், நந்தன் கால்வாய், அத்திக்கடவு–அவிநாசி இரண்டாம் கட்ட திட்டம், தென்பெண்ணை–பாலாறு மற்றும் தென்பெண்ணை–செய்யாறு இணைப்பு உள்ளிட்ட முக்கிய நீர்த்திட்டங்கள் குறித்து அரசுடன் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
60 ஆண்டுகால ஆட்சிகளின் தோல்வி
தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டங்களில் ஏற்பட்டுள்ள பின்னடைவு கடந்த 60 ஆண்டுகால அரசியல் கட்சிகளின் தோல்வி என்றும், குறிப்பாக திராவிடக் கட்சிகளின் நீர் மேலாண்மை அணுகுமுறையில் பெரிய குறைபாடு இருந்ததாகவும் அன்புமணி விமர்சித்தார்.
கடந்த 45 ஆண்டுகளில் தமிழகத்தின் பாசன பரப்பு சுமார் 40 லட்சம் ஏக்கர் குறைந்துள்ளதாகவும், ஏரிகளை சராசரியாக ஒரு மீட்டர் ஆழத்திற்கு தூர்வாரினால் கூடுதலாக 200 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
ரூ.1 லட்சம் கோடி முதலீடு தேவை
நீர் பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு நீர் மேலாண்மை திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றும், அதற்காக சர்வதேச வங்கிகள் அல்லது உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் இருந்து கடன் பெறுவதில் தவறில்லை என்றும் தெரிவித்தார்.
நலத்திட்டங்களுக்கு கடன் வாங்குவதை விட, எதிர்கால தலைமுறையை பாதுகாக்கும் மூலதனச் செலவான நீர் மேலாண்மை திட்டங்களுக்கு கடன் பெற்று முதலீடு செய்வதே சிறந்தது என்றார்.
மேகதாது அணை விவகாரம்
மேகதாது அணையை எந்த சூழலிலும் ஏற்க முடியாது என்றும், அதற்காக நடுவர் மன்றம் தேவையில்லை என்றும் அன்புமணி கூறினார். கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க அனைத்து சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்தி பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, அனைத்து தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும் என்றார்.
விவசாயிகள் கடன் தள்ளுபடி
சூப்பர் எல் நினோ தாக்கத்தால் மாநிலம் கடுமையான வறட்சியை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்களை பாரபட்சமின்றி அனைவருக்கும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
புதிய அரசின் அணுகுமுறை பாராட்டுக்குரியது
எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டு ஆலோசனை நடத்துவது தமிழக வெற்றிக் கழக அரசின் வித்தியாசமான அணுகுமுறை என்றும், இந்த சந்திப்பை கூட்டணி அரசியலாக பார்க்காமல் ஆக்கபூர்வமான அரசியல் உரையாடலாகவே பார்க்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ