Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 06 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL), தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் (TNPGCL), தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (TNGECL) மற்றும் டான்டிரான்ஸ்கோ (TANTRANSCO) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கை அடிப்படையிலான பணியிட மாறுதல்களுக்கு
(Request Transfer Application – RTA) முழுமையான ஆன்லைன் கலந்தாய்வு முறையை அறிமுகப்படுத்தி தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
புதிய நடைமுறையின்படி, பணியிட மாறுதல் தொடர்பான விண்ணப்பங்கள் இனி HRMS Employee Portal வாயிலாக மட்டுமே பெறப்படும்.
விண்ணப்பப் பதிவு, ஆவணச் சரிபார்ப்பு, செயல்திறன் மதிப்பீடு, தானியங்கி தரவரிசை, மாதிரி ஒதுக்கீடு (Mock Allotment), இறுதி ஒதுக்கீடு, மறுபதவி நியமனம், பணியிலிருந்து விடுவித்தல் மற்றும் புதிய பணியிடத்தில் பணியில் சேருதல் உள்ளிட்ட அனைத்து செயல்முறைகளும் ERP அமைப்பு மூலம் முழுமையாக ஆன்லைனில் மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை பணியிட மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்படும். முதல் சுற்றுக்கு ஜனவரி 1 முதல் 20-ஆம் தேதி வரையும், இரண்டாவது சுற்றுக்கு ஜூலை 1 முதல் 20-ஆம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம். ஒருமுறை சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
மேலும், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்த ஊழியர்களுக்கு, ஜூலை 2026-இல் மட்டும் ஒருமுறை சிறப்பு தளர்வு வழங்கப்பட்டு மீண்டும் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, தற்போதைய பணியிடத்தில் குறைந்தது ஒரு ஆண்டு பணியாற்றியவர்கள் மட்டுமே பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.
மருத்துவக் காரணங்கள், 50 சதவீதத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள், மனநலக் குறைபாடுள்ள குழந்தைகளை பராமரிக்கும் ஊழியர்கள் மற்றும் கணவன் அல்லது மனைவி பணிபுரியும் இடத்திற்கு மாற விரும்புவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், காலிப்பணியிடங்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் பணியிட மாறுதல் உத்தரவுகள் வழங்கப்படும் என்றும், அனைத்து உத்தரவுகளும் HRMS ERP தளம் மூலமாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறை மூலம் பணியிட மாறுதல் செயல்முறையில் வெளிப்படைத்தன்மை, விரைவான செயல்பாடு மற்றும் மனித தலையீடு குறையும் என மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam