Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 06 ஜூலை (ஹி.ச)
தஞ்சாவூர் மாவட்டம் ஆர்சுத்திப்பட்டு அரசு திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் இன்று காலை வழக்கம்போல் நெல் மூட்டைகளை அடுக்கும் பணியில் தொழிலார்கள் ஈடுபட்டிருந்தபோது, பல அடுக்குகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் திடீரென சரிந்து விழுந்தன.
இந்த விபத்தில் நெல் கிடங்கில் வேலை பார்த்து வந்த சின்னப்பொண்ணு என்ற பெண் தொழிலாளி சிக்கி கொண்டார்.
பல டன் எடை கொண்ட மூட்டைகளுக்கு அடியில் சிக்கிய அவரை சக தொழிலாளர்கள் மீட்டு, உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் சகுந்தலா என்ற பெண் உள்ளிட்ட இரு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், நெல் மூட்டைகள் முறையாக அடுக்கப்படாததும், பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததுமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதி தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிடங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், கிடங்கு உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b