Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை 06 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் ஆளும் தவெக ஆட்சியைக் கவிழ்க்கப் ரூ. 35 கோடி வரையில் பேரம் பேசியதாகக் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா சில தினங்களுக்கு முன்பு அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனடிப்படையில், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த நரேஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.
மற்றொருபுறம் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து, இது சம்பந்தமாக ஜூலை 6 ஆம் தேதி நேரில் ஆஜராகக் கோரி, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி இன்று (06.07.2026) காலை 10.30 மணியளவில் அவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் இதுவரை ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர் நீதிமன்றத்தை அணுகி சட்டரீதியான நிவாரணம் கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b