ரூ.277 கோடி சட்டவிரோத கிரானைட் குவாரி வழக்கு -குற்றப்பத்திரிகை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
மதுரை, 06 ஜூலை (ஹி.ச.) மதுரை மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.277.42 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தங்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உயர்
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 06 ஜூலை (ஹி.ச.)

மதுரை மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.277.42 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தங்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

மேலூரைச் சேர்ந்த ஹரிலால் நசீர், வடிவேலு, கமருதீன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு, நீதிபதி விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில், தாங்கள் கிரானைட் நிறுவனத்தில் மேலாளர் மற்றும் ஊழியர்களாக மட்டுமே பணியாற்றியதாகவும், சட்டவிரோத சுரங்கத் தோண்டுதலுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், எனவே தங்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில்,

மதுரா கிரானைட் குவாரி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை மீறி, 2005 முதல் 2012 வரை அரசு நிலத்தில் சுமார் 69 ஆயிரம் கன மீட்டர் கிரானைட் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு ரூ.277.42 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குவாரி உரிமையாளர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை அதிகாரி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குறிப்பிட்ட மற்றும் வலுவான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், மனுதாரர்களின் பங்கு குறித்து முழுமையான உண்மை விசாரணை நீதிமன்றத்தில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் மூலம் மட்டுமே தெரியவரும் என்றும், இந்த கட்டத்தில் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதனையடுத்து, குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam