Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 06 ஜூலை (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம், குமரிமுனை அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில், ஆழ்கடல் மீன்பிடி விதிமுறைகளை மீறி சென்றதாகக் கூறப்படும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது இரு தரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்ததால் பரபரப்பு நிலவியது.
சின்னமுட்டம் துறைமுகத்தை மையமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடித்து வருகின்றன.
ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ள இந்தத் துறைமுகத்தில், சில விசைப்படகுகள் விதிமுறைகளை மீறி மீன்பிடிக்கச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஒரு தரப்பு மீனவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில், விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் படகுகளுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினர் திரண்டதால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அது மோதலாக மாறியதில் சில மீனவர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து, மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து
300-க்கும் மேற்பட்ட
(உள்ளூர் தகவலின்படி 350-க்கும் மேற்பட்ட) விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டதால் மீன்பிடித் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் விரைந்து சென்று இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பிறகு பதற்றம் தணிந்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam