கொடைக்கானல் ரோப்வே திட்டம் -போக்குவரத்து கணக்கெடுப்பு நிறைவு
திண்டுக்கல், 06 ஜூலை (ஹி.ச.) மலைகளின் இளவரசியான கொடைக்கானல் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால், முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு
கொடைக்கானல் ரோப்வே திட்டம் : போக்குவரத்து கணக்கெடுப்பு நிறைவு – சாத்தியக்கூறு ஆய்வு தீவிரம்


திண்டுக்கல், 06 ஜூலை (ஹி.ச.)

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால், முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, சுற்றுலாவை மேலும் மேம்படுத்தவும், பயணிகளுக்கு விரைவான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை உறுதி செய்யவும் ரோப்வே அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரூ.79 லட்சம் மதிப்பில் தனியார் நிறுவனம் ஒன்றிடம் டெண்டர் வழங்கியிருந்தது.

அந்த நிறுவனம் கொடைக்கானல் பகுதியில் எங்கு ரோப்வே அமைக்கலாம், தினசரி எத்தனை பயணிகள் பயன்படுத்த வாய்ப்புள்ளது, தொழில்நுட்ப ரீதியான சவால்கள் என்னென்ன என்பது குறித்த விரிவான போக்குவரத்து கணக்கெடுப்பை மேற்கொண்டது.

அந்த கணக்கெடுப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, கணக்கெடுப்பு அறிக்கையின் அடிப்படையில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணியில் மெட்ரோ நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த ஆய்வுப் பணிகளை முழுமையாக முடித்து, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரோப்வே திட்டம் செயல்படுத்தப்பட்டால், கொடைக்கானல் ஏரி, கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக் போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களை பயணிகள் குறைந்த நேரத்தில், வாகன நெரிசலின்றி கண்டுகளிக்க முடியும். மேலும், இது அப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து தீர்வாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b