Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 06 ஜூலை (ஹி.ச.)
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டக்குடியைச் சேர்ந்த பிரபாகரன் (30) என்பவர், தனது மனைவி கார்த்திகா (24)வை கொலை செய்து உடலை எரித்து, சாம்பலை கிணற்றில் கரைத்துவிட்டதாக கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது,
கோவில்பட்டியைச் சேர்ந்த கார்த்திகா ஏற்கனவே திருமணமானவர். பின்னர் பிரபாகரனுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், தம்பதியருக்கு 3 வயதில் தேகஸ்ரீ என்ற மகள் உள்ளார்.
பிரபாகரன் மீது ஏற்கனவே கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திகா தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த பிரபாகரன், கடந்த 3-ஆம் தேதி இரவு தங்களுக்குச் சொந்தமான வயலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்து, உடலை எரித்து சாம்பலை அருகிலுள்ள கிணற்றில் கரைத்துவிட்டதாக கொட்டக்குடி கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்ததுடன் சரணடைந்துள்ளார்.
இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் அளித்த தகவலின் பேரில், மேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தி, பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தடயங்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இந்தச் சம்பவம் நடந்ததாக ஒரு தரப்பும், குழந்தையை அழைத்துச் செல்ல கார்த்திகா வலியுறுத்தியதால் தகராறு ஏற்பட்டதாக மற்றொரு தரப்பும் கூறுகின்றன.
எனினும், கைது செய்யப்பட்ட பிரபாகரனிடம் மேற்கொள்ளப்படும் விரிவான விசாரணைக்குப் பிறகே கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P