Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 06 ஜூலை (ஹி.ச.)
மதுரை அண்ணாநகரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தியதாக ஞானகணேஷ், முருகானந்தம், பிரேம்குமார் மற்றும் பொன்ராஜ் ஆகியோர் மீது அண்ணாநகர் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு சிறப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நால்வரும் மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், ஸ்பாக்களில் சோதனை நடத்த காவல் ஆய்வாளருக்கு அதிகாரம் இல்லை என்று வாதிடப்பட்டது.
இதற்கு அரசுத் தரப்பில், ரகசிய தகவலின் அடிப்படையில் 2024 நவம்பர் 4-ஆம் தேதி மசாஜ் சென்டரில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அப்போது உள்பக்கமாக பூட்டப்பட்ட அறைகளில் அசாம் மற்றும் நாகாலாந்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அரை நிர்வாண நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அங்கு மசாஜ் செய்வதற்கான வசதிகள் இல்லாததுடன், மசாஜ் சென்டர் நடத்த தேவையான தடையில்லாச் சான்றிதழ் மற்றும் உரிமமும் பெறப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஐடிபி சட்டத்தின் கீழ் காவல் ஆய்வாளர் சிறப்பு காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதால், அவர் சோதனை நடத்தியதில் சட்ட மீறல் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், மசாஜ் சென்டர்கள் செயல்பட உள்ளாட்சி அமைப்பின் உரிமம் பெறுவதும், அதற்கு முன் காவல்துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதும் கட்டாயம் என்றும், இந்த வழக்கில் மனுதாரர்களின் தடையில்லாச் சான்றிதழ் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் உரிய அனுமதியின்றி ஸ்பா நடத்தப்பட்டதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
எனவே, வழக்கை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P