Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 06 ஜூலை (ஹி.ச.)
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பை கிடங்கில் நேற்று மதியம் முதல் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ மளமளவென பரவி வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் லாரிகள் மூலம் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது.
ஆனால் குப்பை கிடங்கில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வேதிப்பொருட்கள் காரணமாக தீ முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.
இந்த தீ விபத்தின் காரணமாக அவனியாபுரம், சிந்தாமணி, சாமநத்தம், பெருங்குடி, வெள்ளக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
புகையின் நெடி தாங்க முடியாமல் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பலர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து தீயை முழுமையாக அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோடை வெப்பம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக குப்பை கிடங்குகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால், முறையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b