Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 06 ஜூலை (ஹி.ச.)
காவிரி டெல்டா பாசனத்தின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 97 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 63 கன அடியாக சரிந்துள்ளது.
இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டமும் 77.15 அடியிலிருந்து 76.87 அடியாக குறைந்துள்ளது.
அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில், தற்போது 77 அடிக்கும் கீழாக நீர்மட்டம் சென்றுள்ளது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அணையில் தற்போதைய நீர் இருப்பு 38.90 டிஎம்சியாக உள்ளது. அதேநேரம், டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அணையிலிருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக இருப்பதால், வரும் நாட்களில் நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததும் நீர்வரத்து சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதனால் குறுவை சாகுபடிக்கான நீர் திறப்பில் தாமதம் ஏற்படுமோ என்ற அச்சம் டெல்டா விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b