Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 06 ஜூலை (ஹி.ச.)
கடந்த ஜூலை 2ஆம் தேதி வீரவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மற்றும் அவரது மகன் ஜெயராஜ் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் நெல்லை மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வீரவநல்லூர் போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மகேஷ் (29), குமார் என்ற கொக்கி குமார் (23), ஊர் காடு பகுதியை சேர்ந்த முத்துச்செல்வன் (29) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தொடர்ந்து நேற்று மூலச்சி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (30), ராஜதுரை (30), முத்துபட்டன் என்ற பட்டு ராஜா (20) மற்றும் மகாலிங்கம் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பலரை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில், இரட்டைக் கொலை வழக்கில் மூலச்சி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (29) என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். போலீசாரை பார்த்து தப்பியோடிய கிருஷ்ணன் கீழே தவறி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இரட்டைக் கொலை வழக்கில் இதுரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 20க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொலைக்கான முன்விரோதம் மற்றும் பின்னணி குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Hindusthan Samachar / vidya.b