Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜூலை (ஹி.ச.)
சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலியில் மூன்றாவது கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றபோது நிறுவப்பட்ட கல்வெட்டில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வருவதையொட்டி கல்வெட்டு அகற்றப்பட்டதாக சமூக வலைதளங்களிலும், சில அரசியல் தரப்பிலும் தகவல்கள் பரவின. இது பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள தமிழக அரசு, கல்வெட்டு எந்தவொரு அரசியல் காரணத்திற்காகவும் அகற்றப்படவில்லை என மறுத்துள்ளது.
தொடர் மழை மற்றும் இயற்கை சீற்றங்களால் கல்வெட்டு சேதமடைந்திருந்ததாகவும், அதனை முழுமையாக சீரமைத்து மீண்டும் நிறுவும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த கல்வெட்டை அகற்றி, புதிதாக வடிவமைக்கப்பட்ட கல்வெட்டு வரும் 20-ஆம் தேதிக்குள் அதே இடத்தில் நிறுவப்படும் எனவும் அரசு உறுதியளித்துள்ளது.
முதலமைச்சரின் பெயரை நீக்கும் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும், திட்டப்பணிகளின் ஒரு பகுதியாகவே இந்த சீரமைப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வுக்கு வரும் முதலமைச்சர் விஜய் வருகையை முன்னிட்டு கல்வெட்டு அகற்றப்பட்டதாக கூறப்பட்ட தகவல் முற்றிலும் தவறானது எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நெம்மேலி மூன்றாவது குடிநீர் திட்டம் நிறைவடையும்போது சென்னை மக்களின் குடிநீர் தேவை பெருமளவு பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b