Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 06 ஜூலை (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கினார்.
இதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அவர் இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றார்.
சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக இந்தோனேசியா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த சந்திப்பின்போது, இந்தியா–இந்தோனேசியா இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
அத்துடன், இந்தோனேசியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினரையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடுகிறார்.
தொடர்ந்து, அதிபர் பிரபோவோவுடன் இணைந்து தெற்கு ஜாவாவில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற இந்து மத வழிபாட்டுத் தலமான பிரம்பானன் கோவிலுக்கு சென்று பார்வையிடுகிறார்.
இந்தோனேசியா பயணத்தை முடித்துக்கொண்ட பிறகு பிரதமர் மோடி ஆஸ்திரேலியா செல்கிறார்.
அங்கு அந்நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்.
பின்னர் நியூசிலாந்து சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
ஜூலை 6-ந்தேதி தொடங்கிய இந்த 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, ஜூலை 11-ந்தேதி பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA