பழனி முருகன் கோயிலில் ரோப் கார் பயணத்திற்கு ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்
பழனி, 06 ஜூலை (ஹி.ச.) அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, ரோப் கார் பயணத்திற்கான ஆன்லைன் முன்பதிவு சேவை அதிகாரப்பூர்வமாக இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இ
பழனி முருகன் கோயிலில் ரோப் கார் பயணத்திற்கு ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்


பழனி, 06 ஜூலை (ஹி.ச.)

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, ரோப் கார் பயணத்திற்கான ஆன்லைன் முன்பதிவு சேவை அதிகாரப்பூர்வமாக இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை நேரடியாக வரிசையில் நின்று டிக்கெட் பெற்று வந்த பக்தர்கள், இனி கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களுக்கு வசதியான நேரத்தை முன்கூட்டியே தேர்வு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட்டு, குறிப்பாக முதியோர், குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலில் சிக்காமல் எளிதாக மலைக்கோயிலை அடைய முடியும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்காக கோவில் இணையதளத்தில் சென்று ஒதுக்கீடு செய்த நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் பக்தர் ஒருவருக்கு அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்றுவர ரூ.100 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவு செய்தவர்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 50 பேரும், மாலை 5 மணி முதல் 7 மணி வரை 50 பேரும் அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி முன்பதிவு செய்தவர்கள் இன்று

(ஜூலை 6) முதல் பயணிக்க உள்ளனர்.

மேலும், பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆறு கால பூஜைகளில் பங்கேற்பதற்கான முன்பதிவு வசதியும் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விசுவரூப தரிசனம் முதல் ராக்கால பூஜை வரையிலான ஆறு கால பூஜைகளில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள், இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து தரிசனம் பெறலாம்.

இந்த புதிய நடைமுறைகள் மூலம் பக்தர்களுக்கு தரிசன அனுபவம் மேலும் எளிதாகவும், நேர விரயமின்றியும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் முன்பதிவு குறித்த கூடுதல் விவரங்களை பழனி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பக்தர்கள் அறிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விரைவில் கோவில் தங்கும் விடுதிக்கான அறைகளும் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான வசதிகள் தொடங்கப்பட உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b