Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 06 ஜூலை (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள கூடுவாஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 100 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலின் ஆனி மாத தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கடந்த வாரம் காப்பு கட்டும் நிகழ்வுடன் தொடங்கிய இந்த திருவிழா, பத்து நாட்களாக பல்வேறு சிறப்பு பூஜைகள், மத நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக வழிபாடுகளுடன் நடைபெற்றது.
அதன் முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது.
மேளதாளங்கள் முழங்க, கரகம் மற்றும் அக்னிச்சட்டி ஏந்திய பக்தர்கள் முதலில் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்து வந்த ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் அம்மன் அருள் முழக்கத்துடன் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
தீமிதி நிகழ்வை காண கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
விழாவின் நிறைவாக எல்லையம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam