Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜூலை (ஹி.ச.)
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை குறிவைத்து 'பாஸ் ஸ்கேம்' (Boss Scam) முறையில் ரூ.38.5 லட்சம் மோசடி செய்ய முயற்சி நடைபெற்றதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஜூலை 2-ஆம் தேதி அவரது மொபைல் எண் மர்ம நபர்களால் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வேறு ஒரு மொபைல் எண்ணில் இருந்து அவருக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், நிறுவன தயாரிப்பாளரின் வாட்ஸ்அப் முகப்புப் படத்தை (DP) பயன்படுத்தி, தயாரிப்பாளர் போல பேசி, அவசரத் தேவைக்காக ரூ.38.50 லட்சத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளனர்.
மேலும், நிசர்கா ஆல்டர்நேட்டிவ் நேச்சுரோபதி அண்ட் பாராமெடிக்கல் கவுன்சில் என்ற பெயரில் உள்ள யெஸ் வங்கி கணக்கு விவரங்களையும் அனுப்பி பணம் செலுத்துமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் சந்தேகமடைந்த முரளி கிருஷ்ணன், உண்மையை உறுதிப்படுத்திய பிறகு பணம் அனுப்பாமல் தவிர்த்ததுடன், சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.
புகாருடன் வாட்ஸ்அப் உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களையும் ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடி கும்பலின் மொபைல் எண், வங்கி கணக்கு மற்றும் பின்னணியில் செயல்பட்டவர்களை கண்டறியும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பெரிய நிறுவனங்களை குறிவைத்து, நிர்வாகிகளின் அடையாளத்தை போலியாக பயன்படுத்தி பணம் பறிக்கும் 'பாஸ் ஸ்கேம்' மோசடிகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam