Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 06 ஜூலை (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி. செல்வக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து, தமிழக பத்திரப்பதிவுத் துறையில் பெரும் அளவிலான முறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பத்திரப்பதிவுத் துறை சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சொத்துரிமையைப் பாதிக்கும் வகையில் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனால் 3 சென்ட், 4 சென்ட் போன்ற சிறிய அளவிலான நிலங்களை வாங்குவதும், குடும்பச் சொத்துகளைப் பிரித்து விற்பனை செய்வதும் பொதுமக்களுக்கு கடினமாகிவிட்டதாக கூறினார்.
மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைகளால், பொதுமக்கள் தங்களது நிலங்களை விற்பனை செய்யவும், குடும்பத் தேவைகள் மற்றும் பிள்ளைகளின் திருமணச் செலவுகளுக்காக சொத்துகளைப் பயன்படுத்தவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
2016-ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட சில பத்திரங்களை மறுபதிவு செய்ய அதிகாரிகள் மறுப்பதாகவும், இதன் காரணமாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் தமிழகத்தில் நிலம் வாங்க முடியாமல் அண்டை மாநிலமான கேரளாவில் பத்திரப்பதிவு செய்யும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள் கடுமையாகச் சரிந்துள்ளதாகவும், முன்பு தினசரி 300 டோக்கன்கள் வழங்கப்பட்ட இடங்களில் தற்போது சுமார் 25 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும் கூறினார்.
இதன் காரணமாக தமிழக அரசுக்கு சுமார் ₹10,000 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், ஒரு சென்ட் நிலப் பதிவுக்கே ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம் கேட்கப்படுவதாகவும் புகார்கள் இருப்பதாக தெரிவித்தார்.
'47-ஏ' பிரிவின் கீழ் தீர்க்கக்கூடிய பத்திரப்பதிவு சிக்கல்களுக்குக் கூட உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டப் பதிவு அலுவலகங்களில் இந்த நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.
எனவே, பத்திரப்பதிவுத் துறையில் நிலவும் முறைகேடுகள் குறித்து தமிழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஏழை எளிய மக்களின் சொத்துரிமையைப் பாதுகாக்கும் வகையில் பத்திரப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பி.டி. செல்வக்குமார் வலியுறுத்தினார்.
மேலும், முன்னாள் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியின் பதவிக்காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் காரணமாக தமிழக அரசுக்கு சுமார் ரூ.10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P