Enter your Email Address to subscribe to our newsletters

உக்ரைன், 06 ஜூலை (ஹி.ச)
உக்ரைனின் தலைநகர் கீவ் மீது இன்று காலை ரஷ்யா கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டது.
நகரின் மையப்பகுதிக்கு அருகே உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று நேரடியாக தாக்கப்பட்டு பலத்த சேதமடைந்ததில், உள்ளே இருந்த பொதுமக்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீவ் நகரிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் அடுத்தடுத்து பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. தாக்குதலை முறியடிக்க உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டு, வானில் வந்த ரஷ்ய ட்ரோன்களை இடைமறித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டன. வெடிப்புச் சத்தங்களால் தலைநகர் முழுவதும் பதற்றம் நிலவியது.
கீவ் மேயர் விட்டாலி கிளிட்ஷ்கோ தனது டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவசர அறிவிப்பில், நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொடில் மாவட்டத்தில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.
தாக்குதலுக்கு உள்ளான அந்த கட்டிடத்தின் ஏழாவது முதல் ஒன்பதாவது தளங்களுக்கு இடையே மக்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் உடைந்த பாகங்கள் மற்றொரு குடியிருப்பு கட்டிடத்தின் மீதும், நகரின் பல்வேறு பகுதிகளிலும் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கும் கீவ் நகரில் இந்த தாக்குதல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடங்களில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த ஜூலை 2 ஆம் தேதி கீவ் நகரை குறிவைத்து நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. அந்த தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
தொடர்ச்சியான தாக்குதல்களால் தலைநகர் மக்கள் கடும் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b