Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 06 ஜூலை (ஹி.ச.)
தெலங்கானாவை சர்வதேச தரத்தில் சிறந்த சுற்றுலா மையமாக உருவாக்க மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டி, சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடத்தி, மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தல்களை உலகத் தரத்திற்கு இணையாக மேம்படுத்துவதற்கான பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
கூட்டத்தில், ஹைதராபாத்தில் உள்ள தாராமதி பரதரியை முக்கிய சுற்றுலா தலமாக மேலும் மேம்படுத்தவும், துர்கம் ஏரியை முழுமையான சுற்றுலா மையமாக மாற்றவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், மஞ்சீரா மற்றும் தில்குஷா விருந்தினர் மாளிகைகளை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
சுற்றுலா மையங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விகாராபாத் பகுதியை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்றும், அங்குள்ள வீரபத்ரசுவாமி கோவிலை யாதாத்ரி கோவில் மாதிரியில் விரிவுபடுத்த சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், வனப்பகுதிகளை எகோ டூரிசம் திட்டத்தின் கீழ் மேம்படுத்த வேண்டும் என்றும், குர்ரங்குடா எகோ பூங்காவை முன்மாதிரியாகக் கொண்டு நகரில் மேலும் பல எகோ பூங்காக்களை உருவாக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.
அதேபோல், ஃபியூச்சர் சிட்டி பகுதியில் உள்ள வனப்பகுதிகளை சர்வதேச தரத்தில் நகர்ப்புற வனத் திட்டங்களாக உருவாக்கி, அவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும், ஹைதராபாத் பழைய நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புரானா புல் பாலத்தை முக்கிய சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அப்பகுதியில் போக்குவரத்தை மாற்றி சுற்றுலாப் பயணிகளுக்கான சிறப்பு மண்டலமாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA