Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 06 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் 2026-ஆம் ஆண்டில், 8 இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அகழாய்வு பகுதியும் ஒன்றாகும்.
இந்த பகுதியின் அருகே காரிச்சாத்தான் ஊராட்சிக்குட்பட்ட மலையடிப்பட்டி வைப்பாறு ஆற்றுப்படுகையில், கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாடு தொல்லியல் துறையின் கீழ் அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அகழாய்வு தளத்தில் தமிழ்நாடு முதன்முறையாக கல்படிக்கட்டுகளை கொண்ட சங்க காலக் கிணறு ஒன்று தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வருகிற தொல்லியல் ஆய்வாளர் காளீஸ்வரன் கூறுகையில்,
இங்குள்ள அகழாய்வு தளத்தில் வாழ்விடப் பகுதி மற்றும் ஈமப்பகுதி என இரண்டு பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு இடங்களிலும் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இங்குள்ள வாழ்விடப் பகுதிகளில் சங்க காலத்தைச் சேர்ந்த கட்டட எச்சங்களும் கிடைத்துள்ளன.
கீழடி, அழகன்குளம், காவேரிப்பூம்பட்டினம், அறிக்கை மேடு போன்ற பகுதியில் கிடைக்கக்கூடிய செங்கல் அமைப்புகள் இங்கு உள்ளவைகளுடன் ஒத்துப்போகிறது.
இங்குள்ள செங்கற்கள் 40 சென்டிமீட்டர் நீளமும், 20 சென்டிமீட்டர் அகலமும், 7 சென்டிமீட்டர் கனமும் கொண்டுள்ளதாக உள்ளது.
கண்டறியப்பட்டுள்ள கிணறானது, சங்க கால கட்டட அமைப்பின்படி கட்டப்பட்டுள்ளது.
இந்த கிணற்றின் படிக்கட்டுகள் கற்களாலும், கிணற்றுச் சுவர்கள் செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன.
படிக்கட்டில் உள்ள தேய்மானம் நீண்ட காலமாக மக்கள் இந்த கிணற்றை பயன்படுத்தி உள்ளதை காட்டுகிறது.
கிணற்றின் உள்பகுதி, நீர்மட்டம் அதிகமாக இருந்ததற்கான தடயங்களை காட்டுகிறது.
கோடை காலங்களில் இது பண்டைய கால மக்களின் நீர் ஆதாரமாக இருந்திருக்கக்கூடும்.
இதுவரை 2 மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளில் கிணற்றின் முழு ஆழம் தெரியவரும்.
தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்றுள்ள அகழாய்வு ஆராய்ச்சிகளில் முதன்முறையாக கிணறு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், கண்ணாடி மணி தொழிற்சாலைகள் இங்கு இருந்ததற்கான ஆதாரங்களும் ஆய்வுகள் மூலமாக தெரியவந்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் அகழ்வாய்வில் கண்ணாடி மணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றன.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள நுண் கற்காலகருவிகள் காலம் முதல் வரலாற்று காலம் வரை (பண்பாட்டு காலம்) இங்கு மக்கள் வாழ்ந்ததாக தெரிய வந்துள்ளது. அதாவது, நுண் கற்காலம், இரும்புக் காலம், வரலாற்று தொடக்க காலம், வரலாற்றுக் காலம் ஆகிய அனைத்து பண்பாட்டு காலங்களிலும் இங்கு மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்பதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருக்கிறது.
தென்காசி மாவட்டத்தில், வைப்பாறு ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள இந்த அகழாய்வு தளம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
முந்தைய ஆண்டுகளில் தென்காசி மாவட்டத்தின் திருமலாபுரம், வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளைத் தொடர்ந்து கரிவலம்வந்தநல்லூர் பகுதியிலும் அகழாய்வும் மேற்கொண்டு வருகிறோம்.
இந்த ஆய்வுகளில் கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடுகள், வண்ணம் தீட்டப்பட்ட பானை ஓடுகள், ஓவியம் தீட்டப்பட்ட ஓடுகள், ஆட்ட காய்கள், காதணிகள், தக்கலைகள் போன்றவை கிடைத்திருக்கின்றன என்று குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN