Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 06 ஜூலை (ஹி.ச.)
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று சொந்த ஊருக்கு திரும்பிய நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திற்குள் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததற்கு காரணம், அரசு அவசரகதியில் எடுத்த தவறான முடிவுதான் என்றும், அதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டப்பேரவையில் முதலமைச்சர், விவசாயிகள் போராட்டம் சிலரின் தூண்டுதலால் நடைபெறுகிறது என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய தினகரன், போராட்டத்தை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினைகளையும் நியாயமான கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அத்துடன், அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ள அரசு, எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்துகளையும் பிரச்சினைகளையும் ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்த விவசாயி சோமசுந்தரம் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும் இழப்பீடும் உடனடியாக வழங்க தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ