Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 06 ஜூலை (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள பொய்யப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் நடுத் தெருவைச் சேர்ந்த மூர்த்தி (55) என்பவர் ஜேசிபி வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
நேற்று மாலை சமத்துவப்புரம் குடியிருப்பின் நுழைவு வாயில் பகுதியில் வீரமுத்து மற்றும் வினோத் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை மூர்த்தி விலக்கி விட்டு உள்ளார். அப்போது மூர்த்திக்கும் வீரமுத்துவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அங்கிருந்து அவர்கள் தடுத்து அனுப்பியுள்ளனர்.
இரவு மீண்டும், மூர்த்தி மற்றும் வீரமுத்துக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது அப்பகுதியினர் இருவரையும் பிரித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் மூர்த்தி சாப்பிட்டு விட்டு இரவு சமத்துவபுரத்தின் நுழைவு வாயில் உள்ள தடுப்புக் கட்டையில் படுத்து உறங்கியுள்ளார்.
அப்போது வீரமுத்து மற்றும் சிறுள்ளிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அவருடைய நண்பர் ஆனந்தராஜ் இருவரும் மது போதையில் வந்து, உறங்கிக் கொண்டிருந்த மூர்த்தியை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த விழுப்புரம் நகர காவல்துறையினர் வீரமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை விலக்கி விட சென்றவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட மூர்த்தி, தவெக கட்சியில் கோலியனூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN