Enter your Email Address to subscribe to our newsletters

ஜம்மு-காஷ்மீர், 06 ஜூலை (ஹி.ச.)
கனமழை காரணமாக செனாப் ஆற்றில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்ததையடுத்து, ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள பக்லிஹார் அணையின் 3 மதகுகள் இன்று திறக்கப்பட்டன.
தொடர் கனமழை காரணமாக தோடா-கிஷ்த்வார் பகுதியில் செனாப் ஆற்றின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அணையின் மதகுகளை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
வானிலை நிலவரம் மற்றும் ஆற்றின் நீரோட்டத்தை நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவசர நிலையை எதிர்கொள்ள அனைத்து தொடர்புடைய துறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதை நம்பத்தகுந்த வகையில், மீளமுடியாதபடி நிறுத்தும் வரை, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என இந்தியா மீண்டும் வலியுறுத்திய சில நாட்களிலேயே இந்த நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பக்லிஹார் நீர்மின் திட்டம், நீர்மின் உற்பத்தி மற்றும் நீர் மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
1960-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம், சிந்து நதி அமைப்பின் நீரைப் பகிர்ந்து கொள்வதை ஒழுங்குபடுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, ராவி, சட்லஜ், பியாஸ் ஆகிய கிழக்கு நதிகளின் மீது இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகளின் நீரை பாகிஸ்தான் பெறுகிறது.
இருப்பினும், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கு நதிகளில் குறிப்பிட்ட வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு, உள்நாட்டு பயன்பாடு, விவசாயம் மற்றும் ஓடும் நதி நீர்மின் திட்டங்களுக்காக இந்தியா வரையறுக்கப்பட்ட உரிமைகளை கொண்டுள்ளது. மேற்கு நதிகளில் ஓடும் நதி நீர்மின் திட்டங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய இந்தியாவுக்கு உரிமை உண்டு.
தனக்கு ஒதுக்கப்பட்ட கிழக்கு நதிகளின் நீரை முழுமையாகப் பயன்படுத்த, இந்தியா பல முக்கிய கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. சட்லஜ் நதியில் பக்ரா அணை, பியாஸ் நதியில் பொங் மற்றும் பண்டோ அணைகள், ராவி நதியில் தீன் (ரஞ்சித் சாகர்) அணை ஆகியவை இதில் அடங்கும்.
பியாஸ்-சட்லஜ் இணைப்பு, மாதோபூர்-பியாஸ் இணைப்பு, இந்திரா காந்தி கால்வாய் திட்டம் போன்ற பிற திட்டங்களுடன் சேர்த்து, இந்த நீர்த்தேக்கப் பணிகள் கிழக்கு நதிகளின் பெரும்பாலான நீரைப் பயன்படுத்த இந்தியாவுக்கு உதவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b