Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 06 ஜூலை (ஹி.ச.)
தமிழக அரசின் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது குறித்து போக்குவரத்துத் துறை தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
குளிர்சாதன (AC), ஏசி அல்லாத ஸ்லீப்பர் மற்றும் பிரீமியம் பேருந்துகளைத் தவிர்த்து, மற்ற அரசு பேருந்து சேவைகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது.
2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் தற்போது பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் சாதாரண நகரப் பேருந்துகளில்
(Town Bus) கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் தினமும் சுமார் 70 லட்சம் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.
தமிழக வெற்றிக்கழகம் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த வெற்றிப் பயணம் திட்டம் மூலம் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயண வசதி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது.
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை போக்குவரத்துத் துறை ஆய்வு செய்து வருகிறது.
கர்நாடக அரசின் சக்தி திட்டத்தைப் போன்றே தமிழ்நாட்டிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டால், தினமும் கூடுதலாக சுமார் 28 லட்சம் பெண்கள் இலவசப் பயணத்தின் பயனைப் பெறுவார்கள் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இதனால் அரசு பேருந்துகளில் தினசரி பயணிகள் எண்ணிக்கை தற்போதைய 1.31 கோடியில் இருந்து 1.59 கோடியாக அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
தற்போது சுமார் 7,300 சாதாரண அரசு பேருந்துகளில் மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
திட்டம் விரிவுபடுத்தப்பட்டால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 7,600 புறநகர் பேருந்துகள் மற்றும் அரசுப் விரைவு போக்குவரத்துக் கழகத்தின் 500 பேருந்துகள் உள்ளிட்ட மொத்தம் 15,400 பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயண வசதி கிடைக்க வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில், நகர டீலக்ஸ் உள்ளிட்ட பிற வகை பேருந்துகளையும் திட்டத்தில் சேர்ப்பது குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், புறநகர் மற்றும் விரைவு அரசு பேருந்துகளில் பெண்கள் பயணிக்கும் சராசரி கட்டணத்தை கணக்கிடும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam