தமிழகம் முழுவதும் ஜூலை 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் ஊழல் ஒழிப்பு பிரச்சார இயக்கம் - தமிழக காங்கிரஸ் அறிவிப்பு
சென்னை, 06 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி. தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான மாண்புமிகு செ. ராஜேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்கு
தமிழகம் முழுவதும் ஜூலை 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் ஊழல் ஒழிப்பு பிரச்சார இயக்கம் - தமிழக காங்கிரஸ் அறிவிப்பு


சென்னை, 06 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி. தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான மாண்புமிகு செ. ராஜேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று (06.07.2026) திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்களுக்கு இக்கூட்டம் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையில் அமைந்த ஆட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. செ. ராஜேஷ்குமார் அவர்கள் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருப்பதற்கு இக்கூட்டம் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜுலை 15 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட, வட்டார, நகர, சர்க்கிள், பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டிகள் பெருந்தலைவரின் திருவுருவப் படத்தை அலங்கரித்து, காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஒருவார காலம் நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, லஞ்சம் தவிர் - நெஞ்சம் நிமிர்” என்ற முழக்கத்துடன் மாவட்டம் முழுமையும் “ஊழல் ஒழிப்பு பிரச்சார இயக்கம்” நடத்தும்படி இச்செயற்குழு கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளை கேட்டுக் கொள்கிறது.

எஸ்.எஸ்.ஏ.-2 திட்டத்தின்படி மாவட்ட தலைமைக்கு அடுத்த நிலையில் உள்ள வட்டார, நகர, சர்க்கிள், பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டிகளை முற்றிலும் சீரமைக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்வையாளர்களை அனுப்புவதென இச்செயற்குழு கூட்டம் முடிவு செய்கிறது.

இம்முடிவினை செயல்படுத்துகின்ற வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மண்டலக் காங்கிரஸ் கமிட்டிகளை உடனடியாக அமைத்து அதற்கான விவரங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைக்கும்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

பொதுமக்கள் நன்கொடையின் மூலம் கட்டப்பட்ட ராமர் கோவிலில் நடப்பதை அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பொதுமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு ஒன்றிய பா.ஜ.க. அரசை கேட்டுக் கொள்கிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்கிற போது அதற்கு இணையாக தனியார் எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைப்பதில்லை. இதனால் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன. இதனை உடனடியாக தடுக்கின்ற வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுகிற முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து குரல் கொடுக்கும், போராடும் என்பதை இக்கூட்டம் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது.

என்பன போன்ற தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Hindusthan Samachar / vidya.b