கல்வி கோயிலாக இல்லை,கடையாக மாறிவிட்டது – பொறியியல் கல்லூரிகள் மூடல் குறித்து மாணிக்கம் தாகூர் விமர்சனம்
சென்னை, 06 ஜூலை (ஹி.ச.) நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 12 கல்லூரிகள் மூடப்பட்டிருப்பது கவலைக்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக
மாணிக்கம்


சென்னை, 06 ஜூலை (ஹி.ச.)

நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 12 கல்லூரிகள் மூடப்பட்டிருப்பது கவலைக்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

ஒரு காலத்தில் நடுத்தர குடும்பங்களின் கனவாக இருந்த பொறியியல் படிப்பு, தற்போது அதிக கட்டணம் வசூலிக்கும் வணிகமாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

லாபம் இருக்கும் வரை மாணவர் சேர்க்கை நடத்தி, லாபம் குறைந்தவுடன் கல்லூரிகளை மூடும் நிலை உருவாகியுள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், ஆர்எஸ்எஸ் சிந்தனையால் வழிநடத்தப்படும் மத்திய கல்வி அமைச்சகம், கல்வியை அடிப்படை உரிமையாகக் கருதாமல் சந்தைப் பொருளாக மாற்றிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை (NEP) குறித்து அதிக விளம்பரங்கள் செய்யப்பட்டாலும், உயர்கல்வியில் கல்விக் கட்டண உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, அரசு முதலீட்டின் குறைவு மற்றும் கல்வி நிறுவனங்களின் வணிகமயமாக்கல் போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகளும், தமிழ்நாட்டில் மட்டும் 12 கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் கல்விக் கடன் சுமையால் பாதிக்கப்படுவதாகவும், பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வியை சந்தையின் கைகளில் ஒப்படைத்தால், மாணவர்கள் வாடிக்கையாளர்களாகவும், கல்லூரிகள் கடைகளாகவும் மாறிவிடும் என்றும், கல்வி விற்கப்படும் பொருள் அல்ல; அது சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனைவருக்கும் தரமான, மலிவான மற்றும் சமத்துவமான உயர்கல்வியை உறுதி செய்வதே அரசின் முதன்மை பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P