ரூ.50 கோடி பேரம் பேசியதாக கூறுவது முற்றிலும் பொய் - தவெக எம்.எல்.ஏ. சரவணன் குற்றச்சாட்டை அனிதாராதாகிருஷ்ணன் மறுப்பு
தூத்துக்குடி, 07 ஜூலை (ஹி.ச.) தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட நிபந்தனையின்படி, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று மூன்றாவது நாளாக திருச்செந்தூர் அருகேயுள்ள ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி
அனிதா ராதாகிருஷ்ணன்


தூத்துக்குடி, 07 ஜூலை (ஹி.ச.)

தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட நிபந்தனையின்படி, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று மூன்றாவது நாளாக திருச்செந்தூர் அருகேயுள்ள ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழக வெற்றி கழகத்தின் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் முன்வைத்துள்ள, தனது ஆதரவாளர்களை திமுகவில் சேர்க்க ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டு மிரட்டப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார்.

எனக்கு 50 கோடி ரூபாய் வாங்கித் தாருங்கள் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.

முதலில் 50 கோடி ரூபாய் எவ்வளவு என்பது அவருக்கே தெரியுமா? அவர் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளும் முற்றிலும் பொய்யானவை, என்று அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும், நான் லாட்டரி வியாபாரம் செய்யவில்லை, கஞ்சா வியாபாரம் செய்யவில்லை, பெண்களை வைத்து யாரையும் மானபங்கப்படுத்தவில்லை.

அவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை, என்றும் பதிலளித்தார்.

லாரியை மறித்து பணம் கேட்ட விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,

பணம் கொடுக்க மறுத்ததால் அந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறினார்.

தொடர்ந்து உங்கள் மீது அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் என்ற கேள்விக்கு,

பழுத்த மரம் தான் கல்லடி படும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam