டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு - ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு
சென்னை, 08 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவன ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அதாவது உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.14,340-லிருந்து ரூ.17,925 ஆகவும், விற்பனையாளர்களுக்கு ரூ.15,
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு -  ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு


சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவன ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளது.

அதாவது உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.14,340-லிருந்து ரூ.17,925 ஆகவும், விற்பனையாளர்களுக்கு ரூ.15,530-லிருந்து ரூ.19,413 ஆகவும், மேற்பார்வையாளர்களுக்கு ரூ.17,850-லிருந்து ரூ.22,313 ஆகவும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஊழியர் சங்கங்களுடன் எந்தவித முன் பேச்சுவார்த்தையும் நடத்தாமல் அரசு தன்னிச்சையாக ஊதிய உயர்வை அறிவித்திருப்பது ஏற்புடையது அல்ல என டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாக ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து போராடி வரும் நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 25 சதவீத உயர்வு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஊதிய உயர்வு மட்டுமின்றி பணி நிரந்தரம், பணிக்கால பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்த நிலையில், ஒருதலைபட்சமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனவே, இந்த ஊதிய உயர்வு அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முறையான ஊதிய மாற்றத்தை அறிவிக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b