ஆலங்குடி அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டி ECG எடுத்ததாக வைரல் வீடியோ – மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
புதுக்கோட்டை, 08 ஜூலை (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனையில் நெஞ்சுவலியால் சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு, மருத்துவமனையில் பணிபுரியும் பாதுகாவலர் (செக்யூரிட்டி) ECG எடுத்ததாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில்
அரசு மருத்துவமனை


புதுக்கோட்டை, 08 ஜூலை (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனையில் நெஞ்சுவலியால் சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு, மருத்துவமனையில் பணிபுரியும் பாதுகாவலர் (செக்யூரிட்டி) ECG எடுத்ததாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.

அப்போது பணியில் இரண்டு செவிலியர்கள் மட்டுமே இருந்ததாகவும், நோயாளிக்கு ECG எடுக்கும் பணியில் செக்யூரிட்டி ஈடுபட்டதாகத் தோன்றும் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் நீண்ட காலமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாகவும், கூடுதல் மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், சில மாதங்களுக்கு முன்பு மற்றொரு அரசு மருத்துவமனையில் சமையலறை பணியாளர் ஒருவர் காயமடைந்த நோயாளிக்கு தையல் போட்டதாக வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆலங்குடி மருத்துவமனையில் செக்யூரிட்டி தொடர்பான இந்த வீடியோவும் கவனம் பெற்றுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், ECG எடுப்பது செவிலியரின் பணியாகும்.

வைரலாகும் வீடியோவில் காணப்படும் பாதுகாவலர், இரவு நேரத்தில் செவிலியருக்கு உதவியாக மட்டுமே இருந்தார்.

ECG எடுக்கும் பணியை அவர் மேற்கொள்ளவில்லை.

செவிலியரே ECG எடுத்தார், என தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam