துணைவேந்தர் தேடல் குழுவில் 5 உறுப்பினர்கள் சேர்ப்பது சட்டவிரோதம் -அன்புமணி ராமதாஸ்
சென்னை, 08 ஜூலை (ஹி.ச.) தமிழக மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3-ல் இருந்து 5 ஆக உயர்த்தும் அரசின் முடிவு சட்டவிரோதமானது என்றும், அரசின் அதிகாரத்தை அடகு வைக்கக் கூடாது என்றும் பா.ம.க
அன்புமணி


சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)

தமிழக மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3-ல் இருந்து 5 ஆக உயர்த்தும் அரசின் முடிவு சட்டவிரோதமானது என்றும், அரசின் அதிகாரத்தை அடகு வைக்கக் கூடாது என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தற்போது துணைவேந்தர் நியமனத்தில் உள்ள சிக்கல் தேடல் குழுவில் 3, 4 அல்லது 5 உறுப்பினர்கள் இருப்பது தொடர்பானது அல்ல என்றும், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கே முக்கிய பிரச்சினை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக சட்டங்களின்படி அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி மற்றும் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி ஆகிய மூவர் மட்டுமே தேடல் குழுவில் இடம்பெற வேண்டும் என்றும், அதையும் மீறி கூடுதல் உறுப்பினர்களை சேர்ப்பது சட்டவிரோதம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், துணைவேந்தர் நியமன அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கும் வகையில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தேடல் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து பேசுவது நீதிமன்ற விசாரணையில் குறுக்கிடும் செயலாக அமையும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எனவே, தேடல் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும், வரும் 29ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள வழக்கை திறம்பட நடத்தி, துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P