சிறுவன் நிரஞ்சன் மறைவு -அந்த புன்னகையை என்றும் மறக்க முடியாது, பவன் கல்யாண் உருக்கம்
ஹனுமகொண்டா, 08 ஜூலை (ஹி.ச.) தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டாவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பொனுகண்டி நிரஞ்சன், அரிய மரபணு நோயுடன் போராடி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திர துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாணின்
A


ஹனுமகொண்டா, 08 ஜூலை (ஹி.ச.)

தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டாவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பொனுகண்டி நிரஞ்சன், அரிய மரபணு நோயுடன் போராடி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.

ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திர துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாணின் தீவிர ரசிகரான நிரஞ்சனின் மறைவு செய்தி அறிந்த பவன் கல்யாண், தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

இதுகுறித்து பவன் கல்யாண் வெளியிட்டுள்ள பதிவில்,

நிரஞ்சன் இனி இல்லை என்ற செய்தி எனது இதயத்தை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஹனுமகொண்டாவில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்த தருணங்கள் இன்னும் என் கண் முன் நிற்கின்றன.

கடுமையான நோயுடன் போராடியபோதும், என்னை பார்த்ததும் அவரது முகத்தில் மலர்ந்த அந்த புன்னகையை என்றும் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும்,உடல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவரது மனதில் மிகுந்த தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தது.

இவ்வளவு துணிச்சலான சிறுவன் இவ்வளவு விரைவில் நம்மை விட்டு பிரிந்து சென்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நிரஞ்சன் காட்டிய அன்பு என் இதயத்தில் என்றும் நிலைத்து இருக்கும் என்றும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நிரஞ்சனின் உடல்நிலை குறித்து அறிந்த பவன் கல்யாண், ஹனுமகொண்டாவில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது நிரஞ்சனை அன்புடன் அணைத்துக்கொண்டு, திருப்பதி பிரசாதம் வழங்கியதுடன், அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

அப்போது தனக்கு ஒரு நாய்க்குட்டி வேண்டும் என்று நிரஞ்சன் கேட்டதை தொடர்ந்து, பவன் கல்யாண் உடனடியாக நாய்க்குட்டியை அனுப்பி வைத்தார்.

மேலும், “நான் ‘ஓஜி 2’ திரைப்படம் எடுத்தால், அதில் நீயே எனது சிறப்பு விருந்தினர்.

இருவரும் சேர்ந்து படம் பார்ப்போம்” என்று நிரஞ்சனுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால், அந்த ஆசை நிறைவேறும் முன்பே நிரஞ்சன் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரையும், பவன் கல்யாணின் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கிடையே, நடிகர் சோனு சூத், நிரஞ்சனின் குடும்பத்தினரிடம் வீடியோ அழைப்பு மூலம் பேசி ஆறுதல் தெரிவித்தார்.

குடும்பத்தினருக்கு எப்போதும் துணையாக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA