Enter your Email Address to subscribe to our newsletters

புசான் , 08 ஜூலை (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தென் கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறை அமைச்சர் , புசான் நகரில் பல்வேறு முக்கிய சந்திப்புகளை நடத்தினார்.
ஆந்திர அரசு மற்றும் கொரிய நிறுவனங்களுக்கு இடையே பாலமாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘அபேக்ஸ்-கொரியா’ முதலீட்டாளர் உதவி மையத்தை அமைச்சர் லோகேஷ் தொடங்கி வைத்தார்.
ஆந்திராவில் முதலீடு செய்ய விரும்பும் கொரிய நிறுவனங்களுக்கு தேவையான தகவல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசுடன் ஒருங்கிணைப்பு வசதிகளை இந்த மையம் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, புசானில் உள்ள நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை அமைச்சர் லோகேஷ் சந்தித்து பேசினார்.
அப்போது ஆந்திராவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியில் பிஎன்கே நிதி குழுமத்தின் கிளையை தொடங்க வேண்டும் என்றும், ஆந்திராவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், அமராவதி வளர்ச்சி திட்டங்கள், தொழிற்பூங்காக்கள், மின்சார உள்கட்டமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் முதலீடு செய்ய பிஎன்கே நிறுவனம் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மின்னணுவியல், செமிகண்டக்டர், கப்பல் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் செயல்படும் கொரிய நிறுவனங்களை ஆந்திராவில் முதலீடு செய்ய ஊக்குவிக்குமாறும் அமைச்சர் லோகேஷ் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பிஎன்கே குழும அதிகாரிகள் சாதகமாக பதிலளித்தனர்.
ஆந்திர அரசின் முதலீட்டு முன்மொழிவுகள் குறித்து நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பிஎன்கே நிதி குழுமத்திற்கு கொரியாவில் 398 கிளைகளும், வெளிநாடுகளில் 75 கிளைகளும் உள்ளன.
அந்நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 101.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிகளில் ஆந்திர தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் காடம்நேனி பாஸ்கர், ஏபிஇடிபி தலைமை செயல் அதிகாரி சாகிலி ஷண்மோகன், ஆந்திர கடல்சார் வாரிய தலைமை செயல் அதிகாரி பிரவீன் ஆதித்யா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA