சென்னையில் கார்–ஆட்டோ உரசியதில் மோதல் - இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு
சென்னை, 08 ஜூலை (ஹி.ச.) சென்னை விருகம்பாக்கத்தில் கார் மற்றும் ஆட்டோ லேசாக உரசியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், இருதரப்பினரின் புகாரின் பேரில் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்
Figh


சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)

சென்னை விருகம்பாக்கத்தில் கார் மற்றும் ஆட்டோ லேசாக உரசியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், இருதரப்பினரின் புகாரின் பேரில் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜூலை 5-ஆம் தேதி, விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி அருகே, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ரேபிடோ ஆட்டோ ஓட்டுநர் வேலன் (26) சென்ற ஆட்டோ, எதிரே வந்த கார் மீது லேசாக உரசியதாக கூறப்படுகிறது.

காரை ஓட்டி வந்தவர் விருகம்பாக்கம் திமுக தென் சென்னை மாவட்ட பிரதிநிதி விஜய். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வேலன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ஒரு மாவட்ட செயலாளரின் மகன் எனக் கூறி தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த வேலன், கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

மறுபுறம், விஜயும் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், காரை ஆட்டோ உரசியது குறித்து கேட்டபோது வேலன் தன்னை தாக்கியதாகவும், தனது கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் செயின் சேதமடைந்ததாகவும், பின்னர் வேலனுக்கு ஆதரவாக வந்த மேலும் 10 ஆட்டோ ஓட்டுநர்கள் தன்னை தாக்கி, தனது காரையும் சேதப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், காருக்கு சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த புகாரின் பேரிலும் வேலன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வரும் போலீசார், இருதரப்பினரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், சம்பவத்தை கண்டித்து கால் டாக்சி ஓட்டுநர்கள் அறிவித்திருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ