Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர் 08 ஜூலை (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில நிர்வாகக்குழு மற்றும் மாநிலக்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் மக்கள் நலன் தொடர்பான விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
ஒன்றிய அரசு ரேஷன் பொருட்களின் அளவை குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பொதுத்துறை நிறுவனமான என்எல்சியின் 3 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் முடிவையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார். ஒன்றிய அரசு அந்த முடிவில் உறுதியாக இருந்தால், தமிழக அரசே அந்த பங்குகளை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
விவசாயிகளின் கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், அதுவரை கடன் வசூலில் அதிகாரிகள் விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்காமல் இருக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக ஆட்சியில் ஆளுநர் தலையிடக் கூடாது என்று வலியுறுத்திய வீரபாண்டியன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை ஆளுநர் மீறக் கூடாது.
ஆளுநர் ஒன்றிய அரசின் பிரதிநிதி மட்டுமே; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு இணையான அதிகாரம் அவருக்கு இல்லை. சட்டத்தின் வரம்புக்குள் செயல்பட வேண்டும் என்றார்.
திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் தற்போது தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து அரசியல் ரீதியாக இந்த முடிவை எடுத்துள்ளோம். நூற்றாண்டு வரலாறு கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை அடிப்படையில் செயல்படும் கட்சி என்று கூறினார்.
தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியில் மாணவர்களுடன் ஆங்கிலத்தில் பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், தாய்மொழிதான் சிந்தனைக்கும் அறிவுக்கும் அடித்தளம். மாணவர்களிடம் தமிழிலேயே உரையாடியிருக்க வேண்டும் என்றார்.
மேலும், டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக மனமகிழ் மன்றங்களை அதிகரிப்பது சரியான தீர்வாக இருக்காது என்றும் தெரிவித்தார்.
நடைபாதை வியாபாரிகளை அகற்றாமல், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும், கடலூரில் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் துரை உள்ளிட்டோரை உடனடியாக விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேகதாது அணைத் திட்டத்தை தடுக்க தமிழக அரசு அனைத்து கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீரபாண்டியன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam