Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலை முற்றிலுமாக ஒழித்து, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் ஒரு மாத கால தீவிர போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தமிழ்நாடு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 8, 2026 வரை மாநிலம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கம், அதிகபட்ச அளவில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்வதுடன், அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதாகும்.
இதற்காக காவல்துறைக்கு விரிவான செயல் திட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மண்டல ஐஜிக்கள் மற்றும் காவல் டிஐஜிக்கள் மாவட்டங்களில் நடைபெறும் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணித்து, தினசரி ஆய்வு மேற்கொண்டு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு மாத கால நடவடிக்கையின் போது, ஒவ்வொரு மாநகரம் மற்றும் மாவட்ட காவல்துறையின் செயல்திறன், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவு மற்றும் கைது நடவடிக்கைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.
இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாநில அளவிலான சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும்.
மேலும், அனைத்து மாவட்ட மற்றும் மாநகர காவல் அதிகாரிகளும் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடவடிக்கை அறிக்கையை மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி இந்த சிறப்பு நடவடிக்கையை ஒருங்கிணைத்து கண்காணிப்பார் என்றும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ