அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை, 08 ஜூலை (ஹி.ச) அரசின் ஒப்புதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் இணைப்பு இல்லாமல் செயல்படும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத் துறை எச்சர
Dph


சென்னை, 08 ஜூலை (ஹி.ச)

அரசின் ஒப்புதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் இணைப்பு இல்லாமல் செயல்படும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

இதற்காக மருத்துவக் கல்வி நிறுவனங்களை கண்காணிக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

ஒன்றிய அல்லது மாநில அரசின் அனுமதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெறாமல் சில மருத்துவக் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதாகவும், சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாத மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை மருத்துவம், பல் மருத்துவம், செவிலியம், மருந்தியல், துணை மருத்துவம், சுகாதாரப் பராமரிப்பு, மறுவாழ்வு அறிவியல், ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், பொது சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த துறைகளுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் மாணவர்களை அதிக கட்டணம் வசூலித்து தவறாக வழிநடத்துவதால், அவர்களுக்கு நிதி இழப்பு, கல்வி நிச்சயமற்ற நிலை மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படுவதுடன், சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் தரமும் பாதிக்கப்படும் என சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மருத்துவம் சார்ந்த அனைத்து கல்வி நிறுவனங்களின் அங்கீகார ஆவணங்கள் மற்றும் நடத்தப்படும் பாடத்திட்டங்கள் கட்டாயமாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

அனுமதி இல்லாத அல்லது மாற்றப்பட்ட பாடத்திட்டங்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடத்திட்டங்களின் மாவட்ட வாரியான பட்டியலை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ஆம் தேதி மற்றும் புதிய அங்கீகாரம் அல்லது மாற்றங்கள் ஏற்படும் போதும், சுகாதார சேவைகளின் இணை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதார அதிகாரிகள், அனுமதியின்றி செயல்படும் நிறுவனங்கள் அல்லது பாடத்திட்டங்கள் இருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வேண்டும்.

மேலும், மாவட்ட வாரியாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடத்திட்டங்களின் பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி, அதை பொதுமக்கள் அறியும் வகையில் பொது அறிவிப்பாக வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ