Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)
தமிழக அரசு பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர் அதிகாரக் குழுவை அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு, மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கேபிள் டிவி ஆப்ரேட்டர் பாஸ்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் உள்ள 20 அரசு பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் சாசன அமைப்புகளுக்கும் அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு காரணமாக, துணைவேந்தர் நியமனங்கள் நீண்டகாலமாக நடைபெறாமல் உள்ளதாகவும், இதனால் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P