Enter your Email Address to subscribe to our newsletters

மத்தியப் பிரதேசம், 08 ஜூலை (ஹி.ச.)
மத்தியப் பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள மா பாக்லாமுகி கோயிலுக்கு வெளியே சட்டவிரோதமாக நன்கொடை வசூலித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசால் நியமிக்கப்பட்ட கோயில் நிர்வாகக் குழுவுக்கு அப்பாற்பட்டு, அரசு சாரா குழு ஒன்று பக்தர்களிடமிருந்து ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி காணிக்கைகளை தனியார் வங்கிக் கணக்குகள் மூலம் வசூலித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க, அகர் மால்வா மாவட்ட நிர்வாகம் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழு ஏழு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அகர் மால்வா மாவட்ட ஆட்சியர் ப்ரீத்தி யாதவ் நேற்று பிறப்பித்த உத்தரவின்படி,
விசாரணைக் குழுவுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி பி.எஸ். சோலங்கி தலைமை தாங்குவார்.
மாவட்ட கருவூல அதிகாரி மனீஷ் சோலங்கி மற்றும் நல்கேடா நகராட்சி தலைமை அதிகாரி மினி அகர்வால் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில கலாச்சாரம், சுற்றுலா, அறநிலையத் துறை அமைச்சர் தர்மேந்திர லோதி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியதாவது,
பாக்லாமுகி கோயிலுக்கு வெளியே சிலர் சட்டவிரோதமாக பணம் வசூலிப்பது நேற்று என் கவனத்திற்கு வந்தது.
இதற்காக அவர்கள் ரசீது புத்தகங்களைக்கூட அச்சிட்டுள்ளனர். இத்தகைய தவறு செய்பவர்களை எங்கள் அரசு விடாது.
மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி தலைமையில் உடனடியாக விசாரணைக் குழுவை அமைத்துள்ளோம். குழு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும், குற்றவாளிகள் என கண்டறியப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம் என்பதில் அரசு தெளிவாக உள்ளது.
மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்போம். பக்தர்களும் தங்கள் நன்கொடைகள் சரியான இடத்தை சென்றடைவதை உறுதி செய்த பின்னரே நன்கொடை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பக்தர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
உஜ்ஜைனில் உள்ள மகாகால் கோயிலில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் QR குறியீடுகள் மூலம் நன்கொடை பெறும் முறையை தொடங்கியுள்ளோம்.
படிப்படியாக மற்ற கோயில்களிலும் இதே முறையை செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b