Enter your Email Address to subscribe to our newsletters

லண்டன் , 08 ஜூலை (ஹி.ச.)
இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டம் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 44 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அணியின் பெரிய ஸ்கோருக்கு முக்கிய பங்காற்றினார்.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்திலேயே தடுமாறியது.
முதல் 5 ஓவர்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, அதன் பின்னரும் சரிவில் இருந்து மீள முடியவில்லை.
தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி, 11.4 ஓவர்களில் 76 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், தொடரை சமன் செய்ய இந்திய அணி மீதமுள்ள இரு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA