Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 08 ஜூலை (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் காட்பாடி வசந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் உமாபதி மற்றும் சங்கர். அவர்கள் இருவரும் மது அருந்தி கொண்டிருக்கையில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், அந்த தகராறானது கைகலப்பாக மாறிய நிலையில், அருகிலிருந்த அவர்களுடைய நண்பரான ஜெயசிம்மன் (வயது 23), சண்டையை தடுத்து, இருவரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உமாபதியும், சங்கரும் ஒன்றுசேர்ந்து, ஜெயசிம்மனை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த டியூப் லைட்டை உடைத்து, அதன் கூர்மையான பகுதியால் ஜெயசிம்மனின் வயிற்றில் சங்கர் குத்தியதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அருகிலிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, இருசக்கர வாகனம் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கிருந்த மருத்துவரிடம் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது வாகனம் விபத்துக்குள்ளானதில், ஜெயசிம்மனுக்கு காயம் ஏற்பட்டதாக பொய்யான தகவல் அளித்து சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இருப்பினும், மருத்துவமனை தரப்பிலிருந்து, இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜூலை 4ஆம் தேதி இச்சம்பவம் நடைபெற்ற நிலையில், ஜெய்சிம்மன் குணமடைந்து வீட்டிற்கு சென்றுவிட்டாரா என்பதை உறுதிப்படுத்த காட்பாடி காவல்துறையினர் அவருடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது ஜெயசிம்மனின் தாய், தனது மகனை உமாபதி மற்றும் சங்கர் இணைந்து தாக்கியதுடன், டியூப் லைட்டால் வயிற்றில் குத்தியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சையில் இருந்த ஜெயசிம்மனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அவருடைய தாய் கூறியது உண்மை என்பது உறுதியானது.
அதன் அடிப்படையில் Cr. No.188/2026 என்ற எண்ணில் BNS பிரிவுகள் 296(b), 115(1), 118(1), 351(3) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து காட்பாடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் ஜூலை 4ஆம் தேதி நடைபெற்றிருந்தும், இதுவரை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று முழுமையான விசாரணை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறையின் தாமதமான நடவடிக்கை குறித்து பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய் அதிருப்தி தெரிவித்ததுடன், உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN