போலி நகைகளை அடகு வைத்து ரூ. 14.05 லட்சம் மோசடி - இருவர் கைது
மதுரை, 08 ஜூலை (ஹி.ச.) மதுரை மாநகர் சிம்மக்கல் அருகே தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு ஜி. முத்துப்பாண்டி என்பவர் போலி தங்க நகைகளை அடங்கி வைத்து, ரூ. 14.05 லட்சம் கடனாக பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கிளை மேலாளர் ஏ.கே.ரா
TMB


மதுரை, 08 ஜூலை (ஹி.ச.)

மதுரை மாநகர் சிம்மக்கல் அருகே தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு ஜி. முத்துப்பாண்டி என்பவர் போலி தங்க நகைகளை அடங்கி வைத்து, ரூ. 14.05 லட்சம் கடனாக பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கிளை மேலாளர் ஏ.கே.ராம்குமார் திலகர்திடல் காவல் நிலைய புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் BNS பிரிவு 318(4)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதுகுறித்து போலீசாருக்கு அளித்த புகாரில், “தத்தனேரி அனுமார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜி. முத்துப்பாண்டி (52) என்பவர் கடந்த 2025 நவம்பர் 26 ஆம் தேதி 94.90 கிராம் எடையுள்ள ஒரு தங்க மாலையை அடகு வைத்து, ரூ. 6.80 லட்சம் கடன் பெற்றார்.

பின்னர், டிசம்பர் 9-ஆம் தேதி 92.50 கிராம் எடையுள்ள 2 தங்க செயின்களை அடகு வைத்து மேலும் ரூ. 7.25 லட்சம் கடன் பெற்றுக்கொண்டார்.

இந்த நகைகளை வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட நகை மதிப்பீட்டாளர் எஸ். ஜெயபாபு பரிசோதனை செய்து சான்றளித்ததின் அடிப்படையில் மொத்தம் ரூ.14.05 லட்சம் கடன் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

மேலும், வங்கியின் நடைமுறையின்படி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மறு ஆய்வின்போது, கடந்த ஜூலை 3 ஆம் தேதி நகைகள் மீது சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து, 'ஆசிட் டெஸ்ட்' மூலம் பரிசோதனை செய்ததில், அடகு வைக்கப்பட்ட நகைகள் போலியானவை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, முத்துப்பாண்டியை வங்கி நிர்வாகம் தொடர்பு கொண்டபோது, நகைகளை மீட்டுச் செல்வதாக தெரிவித்த அவர், பின்னர் வங்கிக்கு வரவில்லை எனவும், பெற்ற கடன் தொகையில் ரூ. 4.40 லட்சம் ராஜாராம் என்பவரின் வங்கி கணக்கிற்கும், ரூ. 4.45 லட்சம் கரூர் வைசியா வங்கியின் ஞானஒளிபுரம் கிளையில் கணக்கு வைத்துள்ள சுகுமாறன் என்பவரின் கணக்கிற்கும் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வங்கி தரப்பில் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், போலி நகைகளை அடகு வைத்து வங்கியை ஏமாற்றியதாக ஜி.முத்துப்பாண்டி மீதும், போலி நகைகளை அடையாளம் காணத் தவறியதாக நகை மதிப்பீட்டாளர் எஸ். ஜெயபாபு மீதும் திலகர்திடல் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN