மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகஸ்டில் திறப்பு – 90% நிறைவடைந்த கட்டுமானப் பணிகள்
மதுரை, 08 ஜூலை (ஹி.ச.) மதுரை தோப்பூர் அருகே கோ. புதுப்பட்டியில் 220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021.51 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் நாட்டின் ஜைக்கா (JICA) நிறுவன
மதுரை எய்ம்ஸ்


மதுரை, 08 ஜூலை (ஹி.ச.)

மதுரை தோப்பூர் அருகே கோ. புதுப்பட்டியில் 220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021.51 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் நாட்டின் ஜைக்கா (JICA) நிறுவனத்தின் நிதியுதவியுடன் கடந்த 2024 மே 22-ஆம் தேதி பணிகள் தொடங்கப்பட்டன.

மொத்த திட்டப் பணிகளை 33 மாதங்களில், அதாவது 2027 பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மருத்துவக் கல்லூரி, மாணவர் விடுதிகள், ஆய்வகங்கள் மற்றும் வெளிநோயாளர் பிரிவு (OPD) கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்டத்தில் 900 படுக்கைகள் கொண்ட உள்நோயாளர் மருத்துவமனை கட்டப்பட உள்ளது.

இதில் 150 படுக்கைகள் தொற்றுநோய் சிகிச்சைக்காக தனியாக ஒதுக்கப்பட உள்ளன.

மேலும், 750 இருக்கைகள் கொண்ட நவீன கூட்ட அரங்கம், விளையாட்டுத் திடல், மருத்துவப் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட மொத்தம் 24 கட்டடங்கள் உலகத் தரத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

நான்காம் ஆண்டு மாணவர்கள் ஏற்கனவே தோப்பூரில் கட்டி முடிக்கப்பட்ட விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

மாணவர்களின் தற்போதைய விடுமுறை முடிந்தவுடன் புதிய வளாகத்தில் நேரடியாக வகுப்புகளைத் தொடங்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மீதமுள்ள பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஆகஸ்ட் இறுதிக்குள் மருத்துவக் கல்லூரி வளாகம் திறக்கப்பட்டு, ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் புதிய வளாகத்தில் வகுப்புகள் முழுமையாக தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam