Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரை காட்டமாக விமர்சித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில்,
பாஜக தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தின் எந்த உரிமைகளை பறித்தது என்ற கேள்விக்கு பதிலளிக்காமல், காங்கிரஸ் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் காங்கிரஸ் சிக்கியுள்ளதாகவும், கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சியைப் பெற முடியாத நிலையில் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
அத்துடன், மத்திய அரசின் VB G RAM G திட்டத்தை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருவதாகக் கூறிய அவர், அந்தத் திட்டத்தில் வேலை நாட்களும் ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், தவெக தலைமையிலான தமிழக அரசு அதை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, கச்சத்தீவு ஒப்பந்தம், அவசரநிலை (Emergency), அரசியலமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவு பயன்பாடு, காவிரி நீர் பங்கீடு, முல்லைப் பெரியாறு மற்றும் மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்திற்கு காங்கிரஸ் துரோகம் செய்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மாநில உரிமைகள் குறித்து தற்போது காங்கிரஸ் பேசுவது முரண்பாடான நிலைப்பாடு என்றும், தமிழக மக்களின் நலனை விட அரசியல் குற்றச்சாட்டுகளிலேயே அக்கட்சி கவனம் செலுத்தி வருவதாகவும் தனது பதிவில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P