Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 08 ஜூலை (ஹி.ச.)
நெல்லையில் நடந்த மென்பொறியாளர் கவின் ஆணவக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சுர்ஜித் உள்ளிட்ட 3 பேரின் நீதிமன்றக் காவலை ஜூலை 21ம் தேதி வரை நீட்டித்து நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை குற்றவாளிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). மென்பொறியாளரான இவர், நெல்லையைச் சேர்ந்த சித்த
மருத்துவரை காதலித்தார். இருவரது சாதியும் வேறு என்பதால், பெண்ணின்
தம்பியான சுர்ஜித் கடந்த 2025ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி கவினை கொடூரமாக
வெட்டிப் படுகொலை செய்தார்.
நெல்லை கே.டி.சி. நகரில் நடந்த
இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சுர்ஜித், அவரது தந்தையும் சப் இன்ஸ்பெக்டருமான சரவணன்,
தாயாரும் சப் இன்ஸ்பெக்டருமான கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றியதை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி 612 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை நெல்லை வன்கொடுமை தடுப்பு
வழக்குகளுக்கான 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த அமர்வு வழக்கு நீதிபதி
முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் 2வது எதிரியான சரவணன்
நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 355ன் கீழ் ஆஜராவதிலிருந்து விலக்குக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவருக்கு அனுமதி வழங்கினார். அதேசமயம் சிறையிலுள்ள முக்கிய குற்றவாளியான சுர்ஜித் (முதல் எதிரி), கிருஷ்ணகுமாரி (3வது எதிரி) மற்றும் ஜெயபால் (4வது எதிரி)ஸஆகியோர் காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்கள் 3 பேரின் நீதிமன்றக் காவலை வருகிற ஜூலை 21ம்
தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்த விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட சரவணன், கிருஷ்ணகுமாரி, ஜெயபால் ஆகியோர் தரப்பில் ஓர் ஆவணம் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டது.
அதாவது, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் (கிரிமினல் ஒரிஜினல் பெட்டிஷன் எண்கள் 995/1002 மற்றும் 6979/2026) கடந்த ஜூன் 23ம் தேதி தங்களுக்கு சாதகமாகப் பெறப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவின் நகலை அவர்கள் நீதிபதியிடம் சமர்ப்பித்தனர்.
அத்துடன், இந்த இடைக்காலத் தடையை உயர்நீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை முறைப்படி பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Hindusthan Samachar / ANANDHAN