Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 08 ஜூலை (ஹி.ச.)
பாதுகாப்புத் துறை பொதுத்துறை நிறுவனங்களின் (DPSU) மாற்றம் குறித்து விவாதிப்பதற்காக, நாடாளுமன்ற பாதுகாப்புத் துறை நிலைக்குழு இன்று மாலை 3 மணிக்கு புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாக இணைப்புக் கட்டடத்தில் கூடுகிறது.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராதா மோகன் சிங் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
பழைய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் தன்னிறைவு மற்றும் நவீனமயமாக்கல் குறித்த மறுஆய்வு என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பல்வேறு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை அடையும் நோக்கில் மத்திய அரசு ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த ஆய்வுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
HAL, BEL, BEML, MDL உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது எந்த அளவுக்கு தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளன.
இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை பெருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, புதிய போர் தளவாடங்கள் மற்றும் உபகரணங்களின் தயாரிப்பில் உள்ள சவால்கள் என்ன என்பன குறித்து குழு விரிவாக ஆலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புத் தளவாடங்கள் இறக்குமதியை படிப்படியாகக் குறைத்து, அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவை உலகின் முன்னணி பாதுகாப்பு ஏற்றுமதி நாடாக மாற்றுவதே அரசின் இலக்காக உள்ளது.
இந்தப் பின்னணியில், பொதுத்துறை நிறுவனங்களின் ஆராய்ச்சி-மேம்பாட்டு முதலீடு, தனியார் நிறுவனங்களுடனான கூட்டு, வெளிநாட்டு தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிப்பு ஆகியவை குறித்தும் குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள் எனத் தெரிகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b