Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 08 ஜூலை (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில்கள், சித்தர்கள் வாழும் புண்ணிய பூமியாகப் போற்றப்படும் சிவத்தலங்களாகும்.
இங்கு சிவபெருமான் சுயம்பு வடிவில், மலை உச்சியில் சாய்ந்த நிலையில் சுந்தர மகாலிங்கராகவும், அதற்கு எதிரே உள்ள மலைப்பகுதியில் பார்வதி தேவியுடன் (சந்தன மகாதேவி) சந்தன மகாலிங்கராகவும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
18 சித்தர்களின் தலைமை பீடமாக விளங்கும் இந்த மலைப்பகுதி, அரிய வகை மூலிகைகள் மற்றும் மருத்துவக் குணம் கொண்ட நீர்நிலைகளைக் கொண்டதாகும்.
சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆனி அமாவாசையை முன்னிட்டு வரும் 12ம் தேதி முதல் 15-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச்சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை, கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதன்படி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஜூலை 15ம் தேதி அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பொருட்கள் மலை மீது கொண்டு செல்ல அனுமதி கிடையாது என அறிவுறுத்தியுள்ள வனத்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேற அனுமதி இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b